Friday, January 9, 2015

Managing Examination Anxiety -தேர்வு பயத்தை கையாளும் வழிமுறைகள்

தேர்வு பயத்தை கையாளும் வழிமுறைகள் - ஆர். மனோஜ் – மருத்துவ உளவியல் நிபுணர்- சென்னை

தேர்வுக்கு முன் தினம்
  • முடிந்தவரை புதிய பாடப்பகுதிகளை படிப்பதை தவிர்க்கவும். ஏற்கனவே படித்த பாடங்களை நினைவுகூறுவது மட்டுமே இந்த தினத்தில் செய்யவும்.
  • தேர்வுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் ஆவணங்களை சரி பார்த்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். முன்னமே இதற்கான ஒரு அட்டவணை தயாரித்து வைப்பது மிகவும் உபயோகமாக இருக்கும்.
  • சரியான அளவு சத்துள்ள உணவை உண்ணுங்கள்.
  • இரவில் அதிக காலதாமதப்படுத்தாமல் சீக்கிரமே உறங்க செல்லவும். தளர்வான உடைகளை அணிந்து கொள்ளவும். நல்ல ஓய்வும் தூக்கமும் மறுநாள் தேர்வு நல்லபடியாக எழுத மிக முக்கியம் என்று அறிந்துகொள்ளுங்கள்.


தேர்வு நாள் அன்று
  • காலையில் சீக்கிரமே எழுந்து அவசரமோ, பதட்டமோ இல்லாமல் காலை கடன்களை முடித்து குளித்து, உடை உடுத்தி உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள்.
  • கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுளை வணங்குங்கள். கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் என்று நம்புங்கள்.
  • நல்ல சத்துள்ள உணவும், தேவையான அளவு தண்ணீரும் குடிக்கவும்.
  • தேர்வுக்கான பாடத்தை படிப்பதை தவிர்க்கவும். பாடங்களை நினைவுகூறவும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள். அதிக பட்சமாக முக்கிய தலைப்புகளை மட்டும் நினைவுபடுத்தி பார்க்கலாம்.
  • மிக நிதானமாக தேர்வு மையத்தை சென்று சேரும் வகையில் புறப்படுங்கள்.
  • மிகவும் முக்கியமான குறிப்புகளை மட்டுமே எடுத்து செல்லுங்கள். புத்தகத்தையோ வகுப்புரைகளையோ எடுத்து செல்வதை தவிர்க்கவும்.
  • மறக்காமல் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து செல்லவும்.
  • நீங்கள் தேர்வு மையத்தை அடைந்த பிறகு உங்கள் நண்பர்களுடனோ ,மற்றவர்களுடனோ நீங்கள் எந்தளவு உங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளீர்கள் என்பதை பற்றியோ, எது முக்கியமான கேள்விகள் என்பதை பற்றியோ கலந்தாய்வில் ஈடுபடாதீர்கள்.
  • மற்றவர்கள் படிப்பதை பார்த்தோ, கல்ந்தாய்வுகளில் ஈடுபடுவதை பார்த்தோ பதட்டப்படாதீர்கள். அவைகள் திட்டமிட்டு படிக்காததினாலேயே கடைசி நிமிடத்தில் படிக்க வேண்டியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


தேர்வு மையதினுள் நுழைந்த பிறகு செய்யவேண்டியவை
  • உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைதியாக அமர்ந்து கொள்ளுங்கள்.
  • தேர்வு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் கருவிகளை மேஜைமேல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • பிறகு ஒரு சில வினாடிகள் கண்களை மூடி மனதை அமைதி படுத்திக்கொள்ளுங்கள். உங்களால் வெற்றிகரமாக இந்த தேர்வை எழுத முடியும் என்ற நம்பிக்கையை உங்கள் மனதில் கொண்டு வந்து சுயமாக ஊக்கமளித்துக்கொள்ளுங்கள்.
  • ட்டம் இருப்பதாக தோன்றினால் மூச்சுப்பயிற்சி செய்யலாம் அல்லது மிக மெதுவாக தண்ணீர் அருந்தலாம். இது பதட்டத்தை குறைக்க உதவும்.


தேர்வு எழுதும் போது கவனத்தில் இருக்கவேண்டியவை.
  • வினாத்தாள் கிடைத்தவுடன் எழுதத்துவங்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.
  • முதலில் அது உங்களுக்கானது தானா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
  • கேள்வித்தாளில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை படிக்கவும்.
  • மிக அமைதியாக அவசரப்படாமல் கேள்வித்தாளை முழுமையாகப் படிக்கவும்.
  • உங்களுக்கு சில கேள்விகள் புரியாமல் இருப்பின் அதை மேலும் ஒன்றோ, இரண்டோ முறை படித்து சரியாக புரிந்துகொள்ளுங்கள்.
  • கேள்விகளின் முக்கிய வார்த்தைகளை கோடிட்டு குறித்துக்கொள்ளுங்கள்.
  • எல்லா கேள்விகளையும் படித்த பிறகு அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுத எவ்வளவு நேரம் தேவை என்பதை கணக்கிடுங்கள்.
  • பிறகு ஒவ்வொரு பகுதியையும் முடிப்பதற்க்கு எவ்வளவு நேரம் தேவை என்பதை கணக்கிடுங்கள். ஏற்கனவே தெரிந்த, மாதிரியான கேள்வித்தாள் போலவே (MODEL QUESTION PAPER) இருந்தால் முன்னமே தயார் செய்த திட்டவணையை உபயோகிக்கலாம்.
  • நேரத்தை திட்டம் இடும் பொழுது சிறிது நேரத்தை, கடைசியில் அனைத்து கேள்விகளும் எழுதிய பிறகு அவற்றை சரி பார்க்கவும், தவறுகளை திருத்தவும் ஒதுக்கிகொள்ளுங்கள்.
  • நன்றாகத்தெரிந்த பதில்களை முதலில் எழுதவும். அதை அவசரமில்லாமல், அமைதியாக, சராசரி வேகத்தோடு எழுதுங்கள். இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும்.
  • கூடுமானவரை உங்கள் பதில்களை வரையறுக்கப்பட்டுள்ள வார்த்தை அளவுக்குள்ளாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இது நேரம் வீணாவதை தடுக்கும்.
  • ஏதாவது ஒரு கேள்விக்கு கணக்கிட்டதை விட அதிக நேரம் தேவைப்படும் என்று தோன்றினாலோ, கணக்கிட்ட நேரத்தில் முடிக்க முடியாவிட்டாலோ, விடைதாளில் தேவையான அளவு இடைவெளி விட்டு பின் கடைசியில் எழுதி முடிக்கும் விதத்தில் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
  • சந்தேகமுள்ள பதில்களை யோசிப்பதற்கு அதிக நேரத்தை வீணாக்காதீர்கள். தெரிந்த அனைத்து கேள்விகளையும் எழுதி முடித்த பிறகு மட்டுமே சந்தேகமுள்ள கேள்விகளை எழுத முயலுங்கள். பல நேரங்களில் மற்ற கேள்விகளின் பதிலை எழுதும் போதே இக்கேள்விகளுக்கான துணுக்குக் குறிப்புகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
  • தெரியாத அல்லது சந்தேகமுள்ள கேள்விகளை பார்த்து பதட்டப்படாதீர்கள். மீறி அதிக பதட்டத்தை உணர்வீர்களானால் பேனாவை மேஜை மேல் வைத்து விட்டு முன்னமே கூறப்பட்டுள்ள பதட்டத்தை குறைக்கும் செயல்களில் ஈடுபடுங்கள்.  
  • பன்முகத் தெரிவு வினாக்களை அணுகும் பொழுது கேள்வியை படித்து அதற்கான விடையை நினைவுகூர்ந்த பிறகே கொடுக்கப்பட்டுள்ள பதில்களை பார்க்கவும். தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைப்பு இல்லாத பட்சத்தில் மட்டுமே ஊகத்தின் அடிப்படையில் பதில்கள் எழுதவும்.
  • எழுதிய பதிலில் சந்தேகம் ஏற்பட்டால் சரியான விடை தெரிந்தால் மட்டுமே விடையை மாற்றி எழுதவும்.
  • எக்காரணத்தைக் கொண்டும் தேர்வு நேரம் முடியும் முன்பு தேர்வு மையத்தை விட்டு வெளியே வராதீர்கள். எல்லா கேள்விகளையும் எழுதி முடித்து விட்டாலும் மீதம் இருக்கும் நேரத்தை முழுமையாக எழுதிய விடைகளை சரிபார்க்க பயன்படுத்துங்கள்.


தேர்வை முடித்த பிறகு கவனத்தில் கொள்ள வேண்டியவை
  • தேர்வு மையத்தில் இருந்து வெளியே வந்த பிறகு கேள்வித்தாளை வைத்துக்கொண்டு நீங்கள் எழுதிய விடைகளை சரிபார்ப்பதோ, அல்லது மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதையும் தவிர்த்துவிடுங்கள். அதே போல் மற்றவர்கள் எப்படி எழுதியுள்ளார்கள் என்று அறியவும் முயற்சி செய்யாதீர்கள்.
  • மாறாக உங்கள் திட்டமிடல் சரியாக இருந்ததா, உங்கள் பதட்டம், பயம் எப்படி இருந்தது, அது உங்கள் செயல் திறனை எந்த அளவு பாதித்தது என்று ஆய்வு செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
  • அடுத்த தேர்வின்போது அவைகளை களைந்து, தேர்வில் மிகுந்த செயலாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் முயற்சி செய்யுங்கள்.


நினைவில் எப்பொழுதும் வைத்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்.
  • நீங்கள் அதிக மதிப்பெண் பெற எடுக்கும் ஒவ்வொரு சிறிய முயற்சியும் அதற்கான பயனைத் தரும் என்று நம்புங்கள்.
  • உங்களால் சரியாக திட்டமிடவும், அதை செயல்படுத்தவும் முடியும் என்று நம்புங்கள்.
  • நீங்கள் அடைய நினைத்த குறிக்கோளை சரியான திட்டமிட்ட முயற்சி மூலம் அடைய முடியும் என்று நம்புங்கள்.
  • தோல்விகளை கண்டு துவண்டுவிடாமல் தோல்விக்கான காரணத்தை கண்டுபிடித்து அதை சரி செய்ய முயலுங்கள்.
  • அதே போல் உங்கள் பலவீனங்களை புரிந்து கொண்டு அவற்றை சரி செய்யும் செயல்களில் ஈடுபடுங்கள்.
  • சரியான குறிக்கோளும், தெளிவான நோக்கமும், உறுதியான மனப்பான்மையும், தெளிந்த சிந்தனையும், விடா முயற்சியும் எப்பொழுதும் வெற்றியையே தரும்.
  • நம்முடைய எண்ணமும், மனப்பாங்கும், குறிக்கோளுமே நம்மை உருவாக்குகிறது. எனவே உங்கள் சுயமதிப்பையும், பொறுப்புகளையும் உணர்ந்து சரியான இலக்கை அடையும் நோக்கத்துடன் செயல்படுங்கள்.



உங்களால் முழுநம்பிக்கையுடன் செயல்பட முடியவில்லை என்று தோன்றினாலோ, உங்கள் முயற்சிகள் பயனளிக்கவில்லை என்று தோன்றினாலோ, அல்லது உங்கள் பயம் மற்றும் பதட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவில் இருந்தாலோ ஒரு உளவியல் நிபுணரை அணுக தயங்காதீர்கள்

Simple methods to retain what you have studied - Tips to enhance memory- நினைவாற்றலை அதிகப்படுத்த கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்.

நினைவாற்றலை அதிகப்படுத்த கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்ஆர். மனோஜ் – மருத்துவ உளவியல் நிபுணர்- சென்னை

  • படிக்கும் பொழுது முழு கவனத்துடன் படிக்கவும்.
  • படிக்கும் பொழுது எவ்வளவு புலன்களை உபயோகிக்கிறீர்களோ அதன் அடிப்படையில் உங்கள் நினைவில் நிற்பது அதிகரிக்கும் என்பதை உணருங்கள். உதாரணமாக மனதளவில் படிக்கும் பொழுது கண்கள் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது. உறக்க படிக்கும் பொழுது கண், வாய், காது ஆகிய மூன்று புலங்களும் உபயோகப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து எழுதுவதால் நான்காவது புலனான தொடலும் உபயோகப்படுத்தப்படுகிறது. இதற்கு ஏற்றார் போல் படித்தவற்றை பற்றிய ஞாபகசக்தி அதிகமகும்.
  • நீங்கள் படிக்க வேண்டியவற்றை சரியாக திட்டமிட்டு தொகுத்து ஒழுங்குபடுத்திக்கொள்ளவும். ஒரே மாதிரியான பாடங்கள் கருத்துகள் மற்றும் தலைப்புகளை ஒரே குழுமமாக தொகுத்து அதற்கு ஒரு குறிப்பேடு தயாரித்து அதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
  • நீங்கள் படிக்கும் பாடங்களை ஏற்கனவே படித்த பாடங்களுடன் இணைத்து பார்த்து இரண்டிற்கும் உள்ள தொடர்பை தெரிந்து அல்லது முடிந்தவரை ஏதாவது தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு படிக்கவும்.
  • படித்தவற்றை ஒரு தனிபட்ட சூழ்நிலை, இடம், நேரம் அல்லது ஏதாவது ஒரு சிறு சம்பவத்துடன் இணைத்து உங்கள் நினைவில் வைத்துக்கொள்ளலாம்.
  • நினைவுக்குறிப்புகள், தலைப்புகள் ஒருங்கிணைப்பு, எதுகை மோனை, ஓசைஒழுக்கு பொன்ற உத்திகளின் மூலமும் நீங்கள் படித்தவற்றை கூடுதலாக நினைவில் வைத்துக்கொள்ளலாம்.
  • நீங்கள் படித்தது சம்பந்தமான படங்கள், வரைபடங்கள் மற்றும் இதர விஷயங்களை கற்பனை சித்திரங்களாகவோ அல்லது அது சம்பந்தமான நகைச்சுவையான விஷயங்களின் அடிப்படையில் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
  • நீங்கள் படித்து முடித்த பாடங்கள் மற்றும் படிக்கவேண்டிய பாடங்களை பற்றிய குறிப்புகளை அடிக்கடி கண்களில் படும் இடங்களில் வைத்துகொள்ளுங்கள்.
  • உங்கள் முழு கவனம் தேவையில்லாத செயல்களில் ஈடுபடும் பொழுது (உதாரணமாக பஸ்சில் பயணம் செய்யும் பொழுது) படித்தவற்றை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கலாம்.
  • நீங்கள் படித்த பாடங்களை குறித்து சந்தர்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் உங்கள் நண்பர்களுடன் கலந்தாய்வில் அல்லது விவாதத்தில் ஈடுபடலாம். நீங்கள் படித்ததை உங்கள் நண்பர்களுக்கு கற்றுக்கொடுக்கலாம்.
  • கடினமான பாடங்களை பலமுறை படிக்கவும், அதை புரிந்து நினைவில் நிறுத்தவும் அதிக நேரமும், கவனமும், முயற்சியும் தேவை.

Friday, January 2, 2015

Handling boredom that arise while studying - படிப்பதில் சலிப்புத்தன்மை மற்றும் சோர்வுணர்வு ஏற்படும்பொழுது, சுறுசுறுப்பு ஏற்படுத்த பயன்படுத்த வேண்டிய உத்திகள்.

படிப்பதில் லிப்புத்தன்மை மற்றும் சோர்வுணர்வு ஏற்படும்பொழுது, சுறுசுறுப்பு ஏற்படுத்த பயன்படுத்த வேண்டிய உத்திகள்ஆர். மனோஜ் – மருத்துவ உளவியல் நிபுணர்- சென்னை
  • ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு அல்லது  அதிக பட்சமாக இரண்டு மணி நேரத்திற்கு மேலே ஒரே பாடத்தை தொடர்ந்து படிக்காதீர்கள். அது உங்களுக்கு சலிப்புதன்மையை ஏற்படுத்தலாம். பாடங்களை மாற்றி மாற்றி படியுங்கள். உங்கள் அட்டவணையும் அவ்வாறே இருக்கட்டும்.
  • ஒவ்வொரு அரை மணி நேர படிப்பிற்க்கு பிறகும் இளைப்பாற ஐந்து நிமிட இடைவேளை எடுத்துக்கொள்ளுங்கள்.
  • இந்த இடை வேளையின் போது கண்களை மூடிக்கொண்டு உங்கள் உடலை தளர்வாக வைத்துக் கொள்ள பழகுங்கள். மூச்சுப்பயிற்சியும் செய்யலாம். முழுமையாக அந்த அரைமணி நேரமும் உட்கார்ந்து படித்துக்கொண்டு மட்டுமே இருந்திருந்தால் எழுந்து சிறு நடைபயிற்சி செய்து உங்கள் உடலில் சுறுசுறுப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
  • நடந்து கொண்டு படியுங்கள்.
  • ஒவ்வொரு பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை மாற்று வழிமுறையில் பாடத்தை படியுங்கள். (உதாரணமாக சிறிது நேரம் உரக்கப் படிப்பது, தொடர்ந்து அதை எழுதிப்பார்ப்பது, பிறகு அந்த பாடம் சம்பந்தப்பட்ட படங்கள் மற்றும் வரைபடங்களை வரைந்து பார்ப்பது, அதன் பிறகு அந்த பாடப்பகுதியை பற்றிய கலந்துரையாடலில் ஈடுபடுதல் போன்ற உத்திகளை கையாளலாம்.
  • நீங்கள் படிப்பதை ஒலிநாடாக்களில் பதிவு செய்து அதை பின்னர் மீண்டும், மீண்டும் கேட்டுக்கொள்ளலாம்.
  • நீங்கள் படித்தது சம்பந்தமான படங்கள், வரைபடங்கள் மற்றும் இதர விஷயங்களை கற்பனை சித்திரங்களாகவோ அல்லது அது சம்பந்தமான நகைச்சுவையான விஷயங்களை நினைத்து பார்த்துக் கொள்ளலாம்.
  • அதிக கவனம் தேவையில்லாத செயல்களில்  ஈடுபடும்போது (உதாரணம் உடற்பயிற்சி)  படித்தவற்றை நினைவுகூர்ந்து பார்க்கலாம். இந்த செயல்களையும், படிப்பதையும் மாறி மாறி செய்யுங்கள்.

Essential informations on preparing for final exam -தேர்வுக்கு தயார் படுத்துக்கொள்வது எப்படி

தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற சில பயனுள்ள குறிப்புகள். ஆர். மனோஜ் – மருத்துவ உளவியல் நிபுணர்- சென்னை

அடிப்படையாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்

  • உங்கள் வெற்றிக்கான பொறுப்பு உங்களிடம் மட்டுமே உள்ளது. உங்கள் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிப்பவர்கள் நீங்களே.  நீங்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்ததை சாதிக்காமல் இருப்பதற்கு உங்கள் பெற்றோரையோ, ஆசிரியரையோ அல்லது நண்பர்களையோ குற்றம் கூறுவதை நிறுத்துங்கள்.
  • நீங்கள் வெற்றி பெறுவதற்கு, உங்கள் வாழ்க்கைக்கு, சூழ்நிலைக்கு ஏற்றபடி செய்யவேண்டியது என்ன என்பதை உணருங்கள். அவற்றை அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் நேரத்தை, செய்யவேண்டிய செயல்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் பிரித்து, உங்கள் நேரத்தையும், உங்களிடம் உள்ள திறமை மற்றும் கற்கும்  சாதனங்களையும் முழுமையாக பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
  • உங்கள் கவனம் உங்களுடைய நெறிமுறை, குறிக்கோள் மற்றும் அடிப்படை கொள்கைகளின் மேல் எப்பொழுதும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் படிப்பிலும், வாழ்கையிலும் வெற்றி அடைய நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்றும், செய்யவேண்டியவற்றில் எது முக்கியம், எது முக்கியமில்லை என்பதையும் நீங்களே தீர்மானியுங்கள். மற்றவர்களுடைய தேவைக்கேற்பவோ, வேண்டுதலுக்காகவோ, உத்தரவின் பேரிலோ எதுவும் செய்யவோ, செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
  • உங்கள் கல்வியில் வெற்றி என்ற குறிக்கோளை முதன்மையானதாகவும் மற்ற எந்த குறிகோளையும் விட முக்கியமானதாகவும் வைத்துக்கொள்ளுங்கள். கல்வி துறையில் வெற்றி பெற செய்யவேண்டிய செயல்களை முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துவதும், முதன்மையாக என்ன செய்யவேண்டும் என்று தீர்மானிப்பதும் நீங்களாகவே இருக்கட்டும். மற்றவர்களுடைய, ஆர்வமோ, குறிகோள்களோ, தேவைகளோ உங்கள் கவனத்தை திசைதிருப்பக்கூடாது என்பதில் உறுதியாக இருங்கள்.
சிறந்த கல்வி கற்கும் முறை SQRURR வழிமுறை
ஆய்வு: SURVEY
          முதலில் நீங்கள் படிக்க வேண்டிய பாடத்தை மேலோட்டமாக ஆய்வு செய்து, அது எதை பற்றியது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தலைப்புகள் மற்றும் உபதலைப்புகள், படங்கள், இணைகூற்று, வழிமுறை அட்டவணை, வரைபடம் ஆகியவற்றின் மேல் கவனம் செலுத்துங்கள். நீங்கள் படிக்க போகும் பாடத்திற்க்கும் ஏற்கனவே படித்த பாடத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா அல்லது முன்பாடத்தின் அடுத்த படலமா என்பதை அறியுங்கள்.

கேள்வி. QUESTION
            அடுத்து பாடத்தின் கடைசியில் உள்ள அல்லது உபதலைப்புகளின் பின் உள்ள கேள்விகளை படியுங்கள். தலைப்புகள் சம்பந்தப்பட்ட பல கேள்விகளை உருவாக்குங்கள். அந்த பாடம் சம்பந்தப்பட்ட கேள்விகளை தெரிந்து கொள்ள கேள்வி வங்கியின் (QUESTION BANK) உதவியையும் நாடலாம்.

படித்தல் READ
      அதன் பிறகு அந்த பாடத்தை/ பகுதியை பொறுமையாக நிறுத்தி வாசியுங்கள். முக்கியமான  வாத்தைகளை அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள். சுருக்கவிதிமுறை (ஃபார்முலா), பொருள் வரையரை (டெஃபினிஷன்) ஆகியவற்றின் மேல் அதிக கவனம் செலுத்துங்கள். படிக்கும் பொழுதே நீங்கள் ஏற்கனவே படித்த கேள்விகளுடன் சம்பந்தப்படுத்தி அந்த கேள்விகளுக்கான விடை என்ற அடிப்படையில் படியுங்கள். கஷ்டமான தலைப்புகளை மீண்டும் மீண்டும் படியுங்கள்.

புரிந்துகொள்ளுதல். UNDERSTAND
            நீங்கள் படித்ததை முழுமையாக புரிந்து கொள்ள முயற்சி செய்யவும். புரிந்தவற்றை உங்களுடைய சொந்த வார்த்தைகளில் வடிவமைத்து கொள்ளுங்கள். முடிந்த வரை அந்த பாடம் சம்பந்தபட்டவைகளுக்கு தினசரி வாழ்க்கையில் என்ன பயன்பாடு உள்ளது என்றும் தொடர்பு படுத்த முயலுங்கள்.

ஒப்பித்தல்    RECITE
      நீங்கள் புரிந்து கொண்டதை சுருக்கமாக உங்களுடைய சொந்த வார்தைகளில், ஒப்புவித்து பாருங்கள். முடிந்த வரை நீங்கள் ஏற்கனவே படித்த அனைத்து கேள்விகளுக்கும் விடைகளை ஒப்புவித்து பழகுங்கள். முக்கியமான வார்த்தைகள் மற்றும் சுருக்கவிதிமுறை (ஃபார்முலா), பொருள் வரையரை (டெஃபினிஷன்) ஆகியவற்றை எழுதி பழகுங்கள்.

மறுஆய்வு REVEIW
          நீங்கள் படித்தவற்றை நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதில் மீண்டும், மீண்டும் ஞாபகப்படுத்தி பார்த்துக்கொள்ளுங்கள். சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் படித்ததை சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் மற்ற மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

படிக்கத் தயாரவதற்கு முன் கவனத்தில் வைத்து கொள்ளவேண்டிய முக்கியக் குறிப்புகள்.  
  • முதலில் சரியான இடத்தை தேர்வு செய்யுங்கள். அந்த இடம் நிரந்தரமாக படிக்கும் இடமாகவும், அதிக கவனம் செலுத்தக்கூடிய இடமாகவும், கவனச்சிதறல் ஏற்படுத்தக்கூடிய சூழ்லைகள் இல்லாத இடமாகவும் இருத்தல் அவசியம். படிப்பதற்க்கு மற்ற இடங்களை பயன் படுத்துவது இந்த குறிப்பிட்ட இடம் கிடைக்காத நேரங்களில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை உறுதியாக பின்பற்றுங்கள்.
  • படிக்கும் இடத்தை மிகவும் சுத்தமாகவும், ஒழுங்கமைதியுடைய இடமாகவும் எப்பொழுதும் வைத்திருங்கள். நீங்கள் படிக்க தீர்மானித்த பாடங்கள், சம்பந்தபட்ட புத்தகங்கள் மற்றும் இதர பொருட்கள் மட்டுமே அவ்விடத்தில் அந்நேரத்தில் இருக்க வேண்டும்.
  • தனிப்பட்ட மேசை, நாற்காலிகள் மற்றும் விளக்கு அவ்விடத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
  • தொலைபேசி, அலைபேசி, தொலைக்காட்சி மற்றும் இதர கவனச்சிதறல் ஏற்படுத்தும் சாதனங்கள், அருகாமையில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு இசையில் ஆர்வம் இருந்தால் அதை பின்னணியில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அது உங்கள் கவனத்தை சிதறடிக்காதவாறு பார்த்துகொள்ளுங்கள்.
  • சரியான உயரம் மற்றும் வடிவமுடைய மேசை, நாற்காலிகளை பயன்படுத்துங்கள். அவை உங்கள் உடலுக்கு குறிப்பாக உங்கள் இடுப்பு மற்றும் முதுகுக்கு சிரமத்தை கொடுக்காதவைகளாக இருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். தரையில் உட்கார்ந்து படிக்கும் பொழுது உங்கள் முதுகு அதிகமாக வளைந்து சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் படிப்பதற்க்கு ஏதுவான, உயரமுள்ள ஏதாவது ஒரு பொருளின் மேல் புத்தகத்தை வைத்து படிக்கவும். படுக்கையில் படுத்தவாறு படிக்க கூடாது, ஏனென்றால் அது சோம்பேறித்தனத்தையும், உறக்கத்தையும் ஏற்படுத்தும்.  
திட்டமிட்டு  ஒழுங்குபடுத்துதல்
  • முதலில் நீங்கள் படித்து முடித்தது, படிக்க வேண்டிய பகுதிகள் எவை என்ற அடிப்படையில் பாடப்பகுதியை பிரித்துக் கொள்ளுங்கள்.
  • நீங்கள் படிக்க வேண்டிய பாடத்தை பகுதிகளாக பிரித்து அவற்றை மாதம் / வாரம் / நாள் அடிப்படையில் திட்டமிட்டு படிக்க வேண்டிய அட்டவணையை உருவாக்குங்கள் . முடிந்தவரை அட்டவணையின் அடிப்படையில் படித்து முடிக்க முயற்சி செய்யுங்கள் .
  • ஒவ்வொரு நாள் இறுதியிலும், வார இறுதியிலும் அட்டவணையின் அடிப்படையில் எவ்வளவு முடித்துள்ளீர்கள், எந்தெந்த பாடத்தில் பின் தங்கி உள்ளீர்கள் என்பதை ஆராய்ந்து  அதற்கு தக்கவாறு அட்டவணையை மாற்றி அமையுங்கள்.
  • மாதிரி வினாத்தாள்களின் (MODEL QUESTION PAPER) அடிப்படையில் ஒவ்வொரு வகையான வினாக்களுக்கான விடைகளை எழுத மற்றும் ஒரு பகுதியை முடிக்க எவ்வளவு நேரம் தேவை என்பதை கணக்கிட்டு அதன் அடிப்படையில் எழுதிப் பழகுங்கள். மூன்று மணிநேர தேர்வுக்கு இரண்டரை மணிநேரத்திற்குள்ளாவது எழுதிமுடிக்கும் விதத்தில் திட்டமிடுங்கள்.
  • ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகும் உங்கள் அணுகுமுறை சரியான பலனை தரவில்லை என்று தோன்றினால் மாற்று அணுகுமுறைகளை முயற்சி செய்யலாம் . உங்கள் தேர்வு சம்பந்தப்பட்ட முக்கியமான தேதிகளை எழுதி, அதை எப்பொழுதும் உங்கள் பார்வை படும் இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
படிக்கும் நேரம் 
  • முதலில் உங்கள் கவனம், விழிப்புணர்வு மற்றும் தெம்பினை கருத்தில் கொண்டு எந்த நேரத்தில் படித்தல் அதிகமான  பலன் கிடைக்கும் என்பதன் அடிப்படையில் படிக்கும் நேரத்தை தீர்மானியுங்கள். அது அதிகாலையோ, மாலையோ, அல்லது இரவாகவோ இருக்கலாம். ஆனால் அப்படி தீர்மானிக்கும் நேரத்தில் தினமும் படிக்க வேண்டும். அடிக்கடி  நேரத்தை மற்றக்கூடாது.
  • கடினமான பாடங்களை உங்கள் முழு கவனம் இருக்கும் நேரங்களிலும், எளிமையான பாடங்களை கவனம் குறைவாக இருக்கும் நேரங்களிலும் படிக்கவும்.
  • நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள் அதன் கடினத்தன்மையின் அடிப்படையில் எப்பொழுது படிக்க வேண்டும் என்பதை நீங்கள் அட்டவணை தயாரிக்கும் போதே தீர்மானிக்க வேண்டும்.
கவனம் சிதறாமல் இருக்க
  • படிக்கத்துவங்கும் முன்பு நீங்கள் படிக்க தீமானித்த பாட பகுதியை படிப்பதற்கு தேவையான புத்தகம், வகுப்புரை, மற்றும் இதர உபகரணங்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் படிக்கும் இடத்தில் இதுவல்லாது வேறு ஒரு பொருளும் இருக்கக்கூடாது.
  •  உங்கள் குறிக்கோள், படிக்கும் வழிமுறை, படித்து முடிக்க எடுக்கவேண்டிய முயற்சி ஆகியவற்றை ஒரு முறையாவது ஞாபகப்படுத்திக்கொள்ள சிறிது நேரத்தை ஒதுக்கவும்.
ஊக்கப்பரிசு.
  • உங்கள் வெற்றியை கொண்டாட ஏதாவது ஒரு ஊக்கப்பரிசை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். (உதாரணமாக உங்களுக்கு பிடித்த தின்பண்டம், பிடித்த பாடலை கேட்பது முதலியன)
  • நீங்கள் படிக்க வேண்டும் என்று தீர்மானித்ததை குறிப்பிட்ட நேரத்தில் படித்து முடித்துவிட்டால் இவற்றை செய்துகொள்ளும் சுதந்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமின்மையை குறைக்க
  • ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு அல்லது  அதிக பட்சமாக இரண்டு மணி நேரத்திற்கு மேலே ஒரே பாடத்தை தொடர்ந்து படிக்காதீர்கள். அது உங்களுக்கு சலிப்புதன்மையை ஏற்படுத்தலாம். பாடங்களை மாற்றி மாற்றி படியுங்கள். உங்கள் அட்டவணையும் அவ்வாறே இருக்கட்டும்.
  • ஒவ்வொரு அரை மணி நேர படிப்பிற்க்கு பிறகும் இளைப்பாற ஐந்து நிமிட இடைவேளை எடுத்துக்கொள்ளுங்கள்.
  • இந்த இடை வேளையின் போது கண்களை மூடிக்கொண்டு உங்கள் உடலை தளர்வாக வைத்துக் கொள்ள பழகுங்கள். மூச்சுப்பயிற்சியும் செய்யலாம். முழுமையாக அந்த அரைமணி நேரமும் உட்கார்ந்து படித்துக்கொண்டு மட்டுமே இருந்திருந்தால் எழுந்து சிறு நடைபயிற்சி செய்து உங்கள் உடலில் சுறுசுறுப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.